மீட்பின் பாதை


மீட்பின் பாதையில் ஒரு திருப்பயணம்.

   அன்புள்ள சகோதர சகோதரிகளே சாவின் நிழல் பூமியை ஆக்கிரமித்த  அந்த புனித வெள்ளி. இதோ நம் கண்முன்னே ஒருபாதை. . . . துன்ப துயரத்தின் பாதை . . . . தந்தையின் மீட்புத்திட்டத்திற்கு கீழ்படிந்து, இயேசு கிறிஸ்து உறுதியுடன் நடக்க ஆரம்பித்துள்ள மீட்பின் பாதை.  நம் வாழ்வின் இறுதிநாள்வரை நினைவில் கொள்ளவேண்டிய பாதை - இது அவரது பாதை மட்டுமல்ல,  நாமும் நமது இரட்சணியத்திற்காக பயணிக்கவேண்டிய பாதையும்கூட.  ஆம்
மத். 16:24ல்   “பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்”  

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளும், சிலுவை மரணமும் நமக்கு வெளிப்படுத்துவதுதான் என்ன?


யோவா.3:16-17. 16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். யோவா.15:13. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

தமத்திரித்துவமான நம் இறைவன் மனுக்குலத்தின்மீது கொண்டுள்ள நிபந்தனையற்ற அன்பையே இன்றைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த திருப்பயணத்தை நாம் துவங்க இருப்பது கெத்சமனி தோட்டத்தில்.



மாற்.14:32-34.  32பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், “நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்” என்று கூறி, 33பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். 34அவர், “எனது உள்ளம் சாவுவருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். 35சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். 36“அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.



கெத்சமனி தோட்டத்தில் இருந்த அனைத்து ஆலிவ் மரங்களுமே இயேசுவை ஆறுதல் படுத்த முடியவில்லை. பூமியில் முகம் புதைத்து விழுந்து கிடந்த அவரது நிலை, பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்துவிடும். 
அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.  தனது நண்பர்களாகக் கருதிய அவரது சீடர்களோ ஆழ்ந்த உறக்கத்தில்.  “உம்மைவிட்டு ஒருபோதும் பிரியமாட்டோம்” என்று வாக்குறுதி அளித்தவர்கள் இவர்கள். 
சிறிது நேரத்திற்குமுன் “எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்று மார்தட்டி வசனம் பேசிய பேதுறுவால் தன் கண்களைத் திறந்து வைத்திருக்கக்கூட முடியவில்லை.  கல்வாரிக்கு தன் நண்பர்கள் இல்லாது தனித்தே செல்லவேண்டுமென்பதை உணர்ந்த யேசு அப்போதே தன் தந்தையிடம் செபிக்க தனியாக நடக்க ஆரம்பித்துவிட்டார்.
கடந்த மூன்றாண்டுகளாக அவர் நடந்துசென்ற பாதை ………… வழிநெடுக அவர் வார்த்தைகளைக் கேட்க பின்தொடர்ந்த மக்கள் கூட்டம்,  கடந்து சென்ற பாதையெல்லாம் அன்பு, உதவிகள், மன்னிப்பு,  புதுமைகள்.  அந்த பாதை, இறுதியில் அவரை எங்கு இட்டுச்சென்றது?  மனம் நொந்தழுகவைக்கும், எல்லோராலும் கைவிடப்பட்ட, அச்சுறுத்தும் தனிமை.  ஆம் முரண்பாடு போலத் தோன்றும் ஒரு நிஜம்.  மண்ணில் முகம் புதைத்து கதறும் அந்த நேரத்தில் இறைமகன் என்ற கம்பீரம் எங்கே?  “இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்” என்ற தன் தந்தையை நோக்கி கதறிய ஒரு பரிதாபத்துக்குரிய மனிதரைத்தானே காண முடிகிறது.  ஒரே வார்த்தையில் கடலின் சீற்றத்தையும், புயல் காற்றையும் அடக்கி அமைதி ஏற்படுத்தியவருக்கு தன் மனதிற்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லையே.  அவரை சுக்குநூறாக உடைத்தெறிந்த அந்த மனப்போராட்டம் எல்லாகாலங்களிலும் மனிதரை வாட்டக்கூடிய ஒன்று அல்லவா.
இந்த போராட்டம் நெடுநேரம் நடந்திருக்கவேண்டிய ஒன்று…  ஆனால் கெத்சமனியில் இயேசுவில் அந்த கொடூரமான போராட்டம் முடிவுக்கு வந்தது.  எப்படி?  “உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று தன் தந்தையிடம் கூறிய அந்த நொடியில்.  அந்த சில வார்த்தைகளில் அவர் செய்த ஜெபம் இயேசு அனுபவித்த அத்தனை வேதனைகளையும், விரக்தியையும், பயத்தையும் போக்கி அவருக்கு ஆழமான அமைதியையும், சக்தியையும், மன உறுதியையும் கொடுத்தது.
இயேசுவே நீர் கெத்சமனிக்கு வந்தபோது மனக்கலக்கத்துடனும், சொல்லொண்ணா வேதனையோடும் வந்தீர்.  ஆனால் மன உறுதியோடும், சலனமற்ற அமைதியோடும் அங்கிருந்து நீர் சென்றீர்.  எங்களது இயலாமையையும் பலவீனத்தையும் அங்கு நீர் அனுபவித்தீர். எனவே பயத்தின் பிடியில் துன்புறுவோரையும், மன அமைதியின்றி தவிப்போரின் வேதனைகளையும் நீர் உணர முடியும்.  சோர்வடைந்து வாழ்வோருக்கு நம்பிக்கையையும் பலத்தையும்  கொடுத்தருளும். வாழ்வின் பாரத்தால் வீழ்ந்துகிடக்கும் ஒவ்வொருவரோடும் நீர் துணையாக நடந்துசெல்லும். எங்கள் ஒவ்வொருவரோடும் துணையாக வாரும். 

பாடல் :   ராஜா உம் ப்ரசன்னம் போதுமையா.

மீட்பின்பாதையில் அடுத்து நம் கண்முன் வருவது யூதாஸ் இயேசுவை முத்தமிட்டு காட்டிக்கொடுக்கும் சூழல்




மாற்.14:43-45. இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, பன்னிருவருள் ஒருவரான யூதாசு வந்தான். அவனோடு தலைமை குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரை காட்டிகொடுக்கவிருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப் பிடித்து காவலோடு கொண்டு போங்கள்.” என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, “ரபி” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
மனித வரலாற்றில் மிகவும் அவமானத்துக்குரியதும் துயரம் நிறைந்ததுமான இரவுதான் இது.     1கொரி11:23ல் தூய பவுல் அடிகளார் கூறும்  “ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவு”.  அன்றைய இரவில் இறைமகன் பேசிய வர்த்தைகளையும், செய்த செயல்களையும் நாம் நம் சிந்தனைக்குக் கொண்டுவருவோம்.

அன்று இரவு அவர் பேசிய வார்த்தைகளும் செய்த செயல்களும் மிகவும் வித்தியாசமாகவும் புரிந்துகொள்ள இயலாததாகவுமே இருந்தன.  இன்னும் சொல்லப்போனால் அவரது மனக்கிளர்சியையும், கொந்தளிக்கும் உணர்ச்சிகளையும்  உள்ளடக்கியவைகளாகவே இருந்தன. அவர்களோடு இணைந்து உணவு உண்டதை எத்தனை பெருமையாகக் குறிப்பிடுகிறார்;  ஒரு அடிமையைப்போல் சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட செயலில்தான் எத்தனை அன்பு, பரிவு, பாசம், பணிவு.   அவர் அன்று இரவு பேசிய வார்த்தைகளிலும் செயல்களிலும்தான்  எத்துனை ஆழமான ஆன்மீகம்;  எத்துனை உயர்வான இறை அனுபவம். லூக்.22:15  “அப்போது அவர் அவர்களை நோக்கி, “நான் (துன்பங்கள் படுமுன்) உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்”.  ஆம் அந்த உணவை அவர் தன் சீடர்களோடு சேர்ந்து உண்பதில்தான் அவருக்கு  எத்துனை மகிழ்ச்சி. அதே உணவின்போதுதான், தான் தன் சீடனாலேயே காட்டிகொடுப்போவதையும், அவனது கொடூரமான கோழைத்தனத்தையும் பேசினார்.  அவனுக்கு நிகழப்போகும் அவலமான சாவையும் சாவுக்குப்பின் அவன் (யூதாஸ்) அனுபவிக்கவிருக்கும் நரகத்தையும் பற்றி கூறும்போது அவருள் இருந்த மனகலக்கத்தையும் / மனக்கிளர்ச்சியையும்  வெளிப்படுத்தினார். யூதாஸ் அதனை செயல்படுத்த தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்த அவர், எழுந்து அவனை நோக்கிச் செல்கிறார்.  அவனும் அன்பின் சின்னமான முத்தத்தின் மூலம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறான்.  தன் சாவை, உடல் மற்றும் ஆன்மாவின் அழிவை நோக்கிச் கொண்டு செல்கிறான்.  அதே அன்பின் சின்னத்தை சீடர்களின் பாதத்தில் பதித்த இயேசு மனுக்குலத்தின் மீட்பின் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்.  அந்த இரவில் மட்டும் இரண்டு முத்தங்களைப் வேதபுத்தகத்தில் காண்கிறோம்.  இரண்டும் முற்றிலும் முறண்பாடானவை.  ஒன்று தாழ்ச்சியின் அடையாளம்.  அன்பின் அடையாளம், மற்றொன்று துரோகத்தின் மற்றும் சுயநலத்தின் வெளிப்பாடு.  ஆண்டவர் நமக்குக் காட்டும் படிப்பினைதான்  என்ன?
“ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்”.

பாடல் : அமைதியின் தூதனாய் என்னை மாற்றுமே
அன்பனே இறைவனே என்னிலே வாருமே.


                    அடுத்து நம் கண்முன் வருவது பேதுருவின் மறுதலித்தல்




(லூக் 22:31 - 34;)
அதன்பின்பு இயேசு அவர்களிடம், “இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ‘ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்” என்றார். இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு அவரிடம், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

ஒரு கற்பனை. இயேசு நமது நண்பர்.   படைவீரர்களால் கைதுசெய்யப்பட்டு அரண்மனைக்குள் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்; குளிர்காய்வதர்க்காக வெளியே சிலர் நெருப்பு மூட்டியிருக்கிறார்கள்; நெருப்புக்கு அருகில் சில அரண்மனை பணியாளர்களோடும், யூதர்கள் சிலரோடும், பேதுருவோடும் நாமும்  நின்றுகொண்டிருக்கிறோம்;  நமது இதயமும், உணர்வுகளும் சுக்குநூறாக வெடிக்கும் நிலையில் உள்ளன.  நாம் அதிர்ச்சியால் உறைந்துபோய் வாயடைத்து அமைதி இழந்து நிற்கிறோம்.  பணிப்பெண் ஒருவர் பேதுருவிடம் வந்து, “நீயும் இயேசுவோடு இருந்தவன் தானே” என்கிறார். இல்லையென்று மறுக்கிறார்.   வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்” என்று அங்கிருந்தோரிடம் சொல்கிறார்.  பேதுரு, “இம்மனிதனை எனக்குத் தெரியாது” என ஆணையிட்டு மீண்டும் மறுதலிகிறார்.  சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்களில் சிலர்  பேதுருவிடம் “உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; என்று கூறுகிறார்கள். பேதுரு “இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று ஆணையிட்டுக் கூறுகிறார்.  சேவல் கூவுகிறது;  இயேசு வெளியே அழைத்துவரப்படுகிறார்.  இயேசு பேதுருவைக் கனிவோடு பார்க்கிறார்.  “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு கடைசி இரவு உணவின்போது கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுகிறார். பேதுரு இயேசுவின் நம்பிக்கையை அதிகம் பெற்றவர்.  முதன்மை சீடராகத் தேர்ந்துகொள்ளப்பட்டவர். தனது திருச்சபையை கட்டுவதற்கு இயேசுவால் பாறையாகத் தெரிவு செய்யப்பட்டவர்.  அத்தகைய பேதுருதான் இயேசுவை மூன்றுமுறை மறுதலித்திருக்கிறார்.  மனம் நொந்து அழுதுகொண்டிருக்கும் பேதுருவுக்கு ஆறுதல் கூறுகிறோம்.  பேதுரு நம்மை நிமிர்ந்து பார்த்து கேட்கிறார் “ ஏதாவது ஒரு காரணத்திற்காக, நிர்பந்தத்திற்காக, பயத்திற்காக, சுயதேவைக்காக நீங்கள் இயேசுவைத் தெரியாது என்று கூறியிருக்கிறீர்களா?  கிறிஸ்தவர்கள் என்று சொல்ல தயங்கியிருக்கிறீர்களா?  பேதுருவுக்கு நமது உண்மையான பதில் என்ன?


இந்த நிகழ்வை இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்: இயேசுவின்மேல் பேதுருவுக்கு இருந்த அன்பு நீர்த்துப்போனது ஏன்?
1.    இயேசு அவரை விழித்திருந்து செபிக்க சொன்ன நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டார்–  அவரது செபத்தில் தளர்வு ஏற்பட்டது.
2.    இயேசு கைது செய்யப்பட்டு அரண்மனைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது சிறிது தள்ளியே தயங்கியே பின்செல்கிறார். அப்படிச்சென்றதும் இயேசுவின்மேல் அவருக்கிருந்த நேசத்தால் அல்ல மாறாக இயேசுவுக்கு எத்தகைய முடிவு ஏற்படப்போகிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலாலேயே. 
3.    தன் தலைவருக்கு இரங்குவதற்குப்பதிலாக,  ஆறுதலாக இருப்பதற்குப் பதிலாக குளிர்காயும் இடத்தில் சென்றுகொண்டிருந்த வெட்டிப்பேச்சுக்களில் ஆர்வமுள்ளவராகவே இருந்தார்.  
செபத்தில் ஆர்வமின்மை,  சோம்பல், தேவையற்ற வெட்டிப்பேச்சுக்களில் ஆர்வம் - இவையே இயேசுவை மறுதலிக்கும் செயலில் முடிந்தது. நாம் இவற்றை தவிர்ப்போம். இயேசுவை மறுதலிக்காமல், மறக்காமல், வாழ்க்கை பயணம் மேற்கொள்வோம்.       

பாடல் :  இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

மீட்பின் பாதையில் நம் கண்முன் -ஆளுனர் மாளிகையில் இயேசுவுக்கு நிகழ்ந்தவை:





யோவா.19: 1-3பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். மத்.27:27-30 ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

இந்த உலகில் என் தலையில் ஒரே ஒரு மகுடம் சூட்டப்பட்டது.  அது ஆட்சி உரிமையை பறைசாற்றும் தங்க மகுடம் அல்ல; மாறாக துன்பப்படவைக்கும் அவமானப்படவைக்கும் முட்களின் மகுடம்.  அரசர்களுக்கெல்லாம் அரசராகிய இறைமகனாம் இயேசுவுக்கு முட்களின் மகுடம்.  எத்துனை கொடூரமான முறன்பாடு?  அந்த கிரீடத்தில் இருந்தமுட்கள் மிகவும் நீளமாகவும் மிகவும் கூர்மையானவையும் இருந்தன என்பது இறையியல் வல்லுனர்களின் கணிப்பு. அவை நம் இயேசுவின் தலைக்குள் எத்துனை ஆழமாகச் சென்று எத்துனை வேதனையை கொடுத்திருக்கும்.  அந்த வேதனை உடல் சார்ந்த வேதனை மட்டுமல்ல, அதைவிட அவரின் உணர்வு சார்ந்த, ஆன்மா சார்ந்த வேதனைகள் மிகவும் கொடூரமானவை. அநீதியான மரணதண்டனை ஒருவரை எத்துனை நோகடித்திருக்கும். அந்த வேதனையோடு  அவரது மேனியில்தான் எத்தனை கொடூரமான கசையடிகள்.  நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை” என்று சொல்லும் அளவுக்கா கசையடிகள்?  

இப்போது நாம் பிலாத்துவின் நீதிமன்றத்திற்குள் செல்கிறோம்.  அங்கு நீதி இருகையில் பிலாத்து;  அவர்முன் கைகள் கட்டப்பட்டு நிற்கிறார் இயேசு;  கொலைவெறியுடன் யூத குருக்களும், யூதர்களும்.  இவர்களோடு நாமும். இவ்வுலகைச்சார்ந்த, அவரால் படைக்கப்பட்ட ஒரு மனிதன்முன், பாதுகாப்பற்று, அசிங்கப்பட்டு அவனின் தீர்ப்புக்காகக் நின்றுகொண்டிருக்கிறார் நம் அனைவரையும் தீர்ப்பிட வரவிருக்கும் இவ்வுலகின் ஒரே நீதிபதியான இயேசு.  பிலாத்து  முற்றிலும்  தீயவனோ அல்லது நீதி தவறுபவனோ அல்ல. அவன் முன் விசாரனைக்கு நிறுத்தப்பட்டிருப்பவர், குற்றமற்றவர் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவரை எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என்று அதற்கான வழிகளைக்கூட நாடினான். ஆனால் அவன் இதயமும் நேர்மையும், அவன்முன் இருந்த தீர்ப்புகளும் பிளவுபட்டுக்கிடந்தன.  நீதியா, தனது ஆளுனர் பதவியா என்பதுதான், அந்த பிளவின் அடித்தளம். அவனது சுயநலமே அவனின் தீர்ப்பை முடிவுசெய்தது.  “அவன் ஒழிக, அவனை சிலுவையில் அறைந்துகொல்லும்” என்று ஒட்டுமொத்த  கூட்டமும் ஓலமிடவில்லை.  பலருக்கும் அதில் உடன்பாடு இல்லைதான். அங்கிருந்த அனைவருமே இயேசுவின் மரணத்தீர்ப்பில் மகிழ்வடையக்கூடிய தீயவர்கள் இல்லை; நிச்சயமாக இல்லை.  அச்சமயத்தில் ஆர்ப்பரித்த கூட்டத்தினுள் மாட்டிக்கொண்டார்கள்  இப்படியாகத்தான்  நீதி அந்த கூட்டத்தின் காலில் மிதிபட்டு சின்னாபின்னமாகிவிட்டது. நல்லவர்களின் பலவீனத்தால், வலுவின்மையால், கோழைத்தனத்தால்,  அதிகார வர்க்கத்தின் உத்தரவால், அவர்கள்மேல் உள்ள அச்சத்தால், மனசாட்சியின் வலுவிழந்த அமைதியான குரல், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பில் கரைந்துபோனது.  இந்த நல்லவர்களின் பலவீனம்தான், கோழைத்தனம்தான்,  நியாயத்தை சொல்லும் தைரியமின்மைதான் தீயவர்களின் பலம், சக்தி மற்றும் ஆயுதம். இந்த ஆயுதம்தான் அவர்களின் அநியாயமான முடிவை அரங்கேற்ற வைக்கிறது. யூத குருக்களும் அந்த கூட்டமும் கொடுத்த நெருக்கடியாலும், அவர்களை அமைதிப்படுத்தவுமே அந்த மரணத்தீர்ப்பு வழங்கப்பட்டது.  

இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும் என்று ஆர்ப்பரித்த யூதர்களும் யூதகுருக்களும்தான் இயேசுவின் கொடூரமான சிலுவைச்சாவுக்கு காரணமான குற்றவாளிகளா?  இயேசுவைச் சிலுவைச்சாவுக்குத் தீர்ப்பிட்ட பிலாத்து குற்றவாளியா? இதைப்பற்றி கத்தோலிக்கத் திருச்சபை விசுவசித்து அறிக்கையிடும் வேதசத்தியம்தான் என்ன?

பிலாத்து, யூதர்கள்தான் இயேசுவின் சிலுவைச் சாவுக்குக் காரணமான குற்றவாளிகளா?

பல யூத மற்றும் ரோமைஅமைப்புகளும், அதிகாரத்தில் இருந்தவர்களும்; எடுத்துக்காட்டாக கயபா, யூதாஸ், ஏரோது, போஞ்சு பிலாத்து போன்றவர்கள் இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு காரணமாக இருந்தாலும்கூட தனி ஒரு மனிதரையோ, ஒரு இனத்தவரையோ இயேசுவின் சிலுவைச் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் எனக் கூறமுடியாது.  உலகத்தில் உள்ள அனைவரின் பாவங்களும்தான் இயேசுவின் சிலுவைச் சாவுக்கு காரணம்,  என்பது திருச்சபையின் நிலைப்பாடு.  ஆம் பாவிகளாகிய நாம் தான் இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிட்டோம்.  நாம் கட்டிக்கொண்ட பாவங்கள்தான் இயேசுவின் சிலுவைச்சாவுக்குக் காரணம்.  இதை உணர்ந்து நமது வாழ்வை சீர்படுத்திக்கொள்ளாதவரை இந்த தவக்காலமோ, பாஸ்காக் கொண்டாட்டங்களோ பலனற்றவையே.  நம்மால் துன்புறும் இயேசுவுக்கு எந்த அன்பையும், ஆறுதலையும் கொடுக்கமுடியாது. 


பாடல்  : அப்பா நான் தவறு செய்தேன்
               உம் அன்பை உதறி சென்றேன்.


இயேசுவின் கல்வாரிப் பயணம்




தீர்ப்புக்குப்பின் இயேசு வெளியே வருகிறார்; சிலுவையைப் பார்த்தவுடன் இயேசு அதைநோக்கி சென்று அதை வாங்கி, முத்தமிட்டு தன் தோள்மேல் வைத்துக்கொள்கிறார்.

இயேசுவின் கல்வாரிப் பயணம் துவங்குகிறது… அவரோடு நாமும் பயணிக்கிறோம்.  அவரின் பயணத்தில் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட கொடுரமான நிகழ்வுகள் பல.  இருப்பினும் கல்லும் கசிந்துருகும் நிகழ்வுதான் சிலுவையைச் சுமந்தபடி இயேசு எதிர்வரும் தன் தாயைச் சந்திப்பது.
ஒருவரையொருவர் ஏறெடுத்துப்பார்க்கின்றனர்.  ஒருவர் மற்றொருவரின் நிலையை புரிந்துகொள்கின்றனர்.  தன் மகன் யாரென்பதையும்,  எங்கிருந்து வந்தார், எதற்காக வந்தார்,  கடந்த கால, நிகழ்கால மற்றும் வரும் காலங்களிலும் மனுக்குலம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரம்தான் இந்த கொடூர வேதனை என்பதையும்கூட அன்னை அறிவார்.  அதேபோல்   தந்தையின் மீட்புத் திட்டத்தில் பங்குகொள்வதற்காகத்தானே தன்னைப் பெற்றவள் ஏழு வியாகுலங்கள் அவள் இதயத்தை ஊடுறுவ துன்புறுவதையும் இயேசு நன்கு அறிவார்.  யார் யாருக்கு ஆறுதல் சொல்வது.  எனவேதான் இந்த சந்திப்பு மனித வரலாற்றிலேயே மிகவும் வேதனையான ஒரு சந்திப்பாகக் கருதப்படுகிறது. 
என் துன்பங்களோடு அமல உற்பவியான என் தாயின் வேதனைகளையும் துயரங்களையும் எண்ணிப்பாருங்கள். ஓ….. அவர்கள் என்னை ஒன்பதுமாதம் மட்டும் சுமக்கவில்லை, தன் வாழ்நாள் முழுவதும் சுமந்தார்கள். நான் இறந்த பின்பும் கூட தன் மடியில் என்னை சுமந்தவர்கள்.   எங்கள் இருதயங்கள் தந்தையின் விருப்பத்தாலும் மனுக்குலத்தின் மேல் கொண்ட அன்பாலும் ஐக்கியப்பட்டிருந்தன.  அவை எப்போதும் ஒன்றாய்த் துடித்தன.  தீராத நோயினால் மருத்துவரால் சாவுக்கு நாள் குறிக்கப்பட்ட ஒரு மகனின் தாய்க்காக வருந்தியிருப்பீர்கள்.  மனித நீதியின் நிமித்தம் நீதி மன்றத்தில் நீதிபதி ஒருவரால், சாவுக்கு தீர்ப்பிடப்பட்ட ஒரு மகனுடைய தாய்க்காகவும் நீங்கள் வேதனைப் பட்டிருப்பீர்கள்.  ஆனால் என்னை கர்ப்பமுற்ற நாளிலிருந்து “மரணத்திற்குத் தீர்ப்பிடப்பட்டவன் நான்” என்பதை நினைத்து, நினைத்து  நடுங்கிக் கொண்டிருந்த என் தாயை நினைத்துப் பாருங்கள்.  புதிதாய்ப் பிறந்த தன் சிசுவாகிய என் ரோஜா மேனியில் முதல் முறையாக முத்தமிட்டபோது வரப்போகிற தன் குழந்தையின் காயங்களையும் கொடூரமான மரணத்தையும் உணர்ந்த என் தாயை எண்ணிப் பாருங்கள். முப்பத்து மூன்று ஆண்டளவாக இந்த வேதனையை அனுபவித்தார்களே அந்த தாயை எண்ணிப் பாருங்கள்.  அனைத்தும் எதற்காக?
நான் வளர்ந்து மனிதனாகி கல்வாரியில் பலியாகாமல் தடுப்பதற்காக பத்து முறை, நூறு முறை ஏன் ஆயிரம் முறை கூட தன் உயிரைக் கொடுத்திருக்கக்கூடிய இந்த தாயை எண்ணிப்பாருங்கள்.  மனுக்குலத்தின் மேலுள்ள மட்டற்ற கருணையாலும், கடவுளின் மகிமைக்காக அவரின் சித்தத்தை ஏற்கும்படி அந்த பயங்கர நேரத்தை அறிந்த அந்த அபாக்கியவதி பட்ட உள்ள வேதனைகளை தியானித்துப்பாருங்கள்.  நாம் அவரை எப்படி ஆறுதல் படுத்தப்போகிறோம்.




பாடல்  : வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
              சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ
            பன்னிரு வயதில் ஆலயத்தில் அந்த அறிஞர்கள் புகழ்ந்தவரை
            கள்வனைப் போலே கழுமரத்தில் அந்த கயவர்கள் கொன்றதனால்.


இயேசு கள்வர்கள் நடுவில் மரணத்தின் வாயிலில்




இறுதியாக இயேசு இரு கள்வர்கள் நடுவில் மரணத்தின் வாயிலில் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். ஆடைகள் களையப்பட்ட நிலையில் இப்போது அவர் திருமேனி உலக மக்கள் அனைவரின் பாவங்களால் மூடப்பட்டிருக்கிறது.  அவர் இவ்வாறு தொங்கிக்கொண்டிருப்பது நம் மீது கொண்டிருந்த அன்பிற்காக மட்டுமே.  அவரது திருமேனியிலிருந்து வழிந்தோடிக்கொண்டிருக்கும் இரத்தம் இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறதுதானே.  அநீதி, பொய், பழிவாங்குதல்,  வெறுப்பு,  பிறரைப்பற்றி தவறாகப் பேசுதல்,  புனிதப் பொருள்களை மதியாது நடத்தும் அவச் செயல், ஆன்மீக காரியங்களின்மேலும், அடுத்திருப்பவர்மேலும் நாம் காட்டும் அலட்சியப்போக்கு போன்ற ஆணிகளால் இன்றும் இயேசுவின் இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதானே இருக்கிறது?

இந்த சூழ்நிலையிலும் இயேசு செய்யும் இரு செயல்கள் நம் மனதில் பதித்துப் போற்றப்பட வேண்டியவை. 



முதலாவது: நல்லகள்வனுக்கு விண்ணரசை வாக்குத்தத்தம் செய்தல்:


லூக்.23: 43அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். இந்த வாக்குறுதி மனம் திருந்திய நல்லகள்வனுக்கு மட்டுமல்ல, மாறாக  பாவ வாழ்க்கையைவிட்டு மனம் திரும்பி வாழும் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் வாக்குறுதியாகும்.  இது நமக்கு எத்துனை ஆறுதலான, மகிழ்ச்சி தரும் வாக்குறுதி.  இதைவிட பெரிய பரிசு நமக்கு என்ன இருக்கமுடியும்.  இந்த வாக்குறுதியை “திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை”யில் மிகத்தெளிவாக விவரித்துள்ளார் இயேசு. இந்த உவமையில் கடைசியில் பணிக்கு வந்து ஒருமணிநேரமே உழைத்து ஒரு தெனாரியம் பெற்றவர்களின் எடுத்துக்காட்டுதான் இந்த நல்ல கள்வனும், மனம் திருந்தி வாழும் நாம் ஒவ்வொருவரும்.  நல்ல கள்வனுக்கும் நமக்கும், இயேசு சிலுவையிலிருந்து அளிக்கும் வாக்குத்தத்தத்தின் செய்தி என்ன தெரியுமா? விண்ணரசு நமக்குக் கிடைப்பது நமது தகுதியினாலன்று, மாறாக இறைவனின் பேரிரக்கதினால் மட்டுமே.  நாம் பாவங்களை விட்டொழித்து, மனம்திருந்தி வாழும்போது இறைவனின் பேரிரக்கத்தை முழுமையாகப் பெறுவோம்.



இரண்டாவது: யோவா.19:26-27 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.





சிலுவையில் மரணவேதனையில் துடிதுடித்துகொண்டிருந்த அந்த நேரத்திலும் உமது அன்னையையும் நீர் மிகவும் நேசித்த சீடரையும் பார்த்து பரிவுடன் பேசுவது இயேசுவே எங்கள்  காதில் ஒலிக்கிறது, “அம்மா, இவரே உம் மகன்” என்றீர். பின்னர் உமது சீடரிடம், “இவரே உம் தாய்” என்றீர். எங்கள் காதுகளில் “அம்மா இவர்களே உம் பிள்ளைகள்”  மேலும் எங்களைப்பார்த்து  “இவரே உங்கள் தாய்” என்றே எங்கள் காதுகளில் ஒலித்தன. ஆம் அவர்கள் வழியாக நீர் பேசியது எங்களிடமே.  எம்மை உமது தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டதை உணர்கிறோம்;  எங்கள் வாழ்வில், இதயத்தில் அன்னை மரியாளை எங்கள் அனைவரின் அன்னையாக எற்றுக்கொள்ளும்படி கூறியதை எங்களது பாக்கியமாகக் கருதி போற்றுவோம்.
இறைவனின் பேரிரக்கத்தால் பாவிகளாகிய நாமும் விண்ணரசிற்குத் தகுதிபெருவோம் என்ற நம்பிகையையும்;  அன்னைமரியாளின் பராமரிப்பையும் நமக்கு அளித்தபின்னும்தான் எல்லாம் நிறைவேறிற்று என்று உணர்ந்த நம் மீட்பராம் இயேசு தனது ஆவியை தன் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

பாடல் : ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முக்தி செய்கிறேன்.


யேசுவோடு மீட்பின் பாதையில் பயணித்த நாம் என்னவெல்லாம் தெரிந்துகொண்டோம் மற்றும் கற்றுக்கொண்டோம்?

i.      அனைத்திற்கும் மேலாக இறைவனை அன்பு செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டோம்.
ii.      இறைவனை அன்பு செய்வதென்பது அடுத்திருப்பவரை தனது சகோதரர்கள் சகோதரிகள் எனக் கருதி அவர்களை அன்புசெய்து அவர்களுக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணி செய்யவேண்டும் எனக் கற்றுக்கொண்டோம்.
iii.      தீமை செய்தவர்களை காயப்படுத்துவதைவிட மன்னிப்பதே வெற்றி என்பதைக் கற்றுக்கொண்டோம்.
iv.      நன்மை செய்வதன்மூலமே தீமையை வேரறுக்கமுடியும் என்றும் கற்றுக்கொண்டோம்.
v.      அடுத்திருப்போரை தன்பால் ஈர்த்துக்கொள்ளவும் அவர்களின் சுமைகளை அகற்றவும் அன்பால் மட்டுமே முடியும் என்பதைக்  கற்றுக்கொண்டோம்.
vi.      துன்பங்களுக்குப்பின் நீதியின் பரிசு உள்ளது என்ற நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டோம்.
vii.      தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியது, பாவிகளாகிய எங்கள்மேல் வைத்திருந்த எல்லையற்ற அன்பின் நிறைவு என்பதைத் தெரிந்துகொண்டோம்.
viii.      இயேசு சுமந்த சிலுவையின் பாரம்தான் நம்மை பாவச்சுமைகளிலிருந்து விடுவித்தது என்பதைப் புரிந்துகொண்டோம்.
ix.      உமது கீழ்ப்படிதலை கண்டுணர்ந்தபோதுதான் எங்கள் கீழ்ப்படியாமையையும் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்களையும்  உணர்ந்தோம்.
x.      யூதாஸால் நீர் விற்கப்பட்டதையும். பேதுருவால் மறுதலிக்கப்பட்டதையும், உமது சீடர்கள் உம்மை நிர்கதியாய் விட்டுவிட்டு ஓடிப்போனதையும் கண்டபோதுதான் எங்கள் வாழ்வில் பழக்கமாகிப்போய்விட்ட துரோகச் செயல்களும், ஏமாற்றுதல்களும், காசுக்காக விலைபோன காரியங்களும் எங்கள் கண்முன்னே வந்து நிற்கின்றன.
xi.      மாசுமறுவற்ற செம்மறியான உம்மைப் பார்த்தபோதுதான் எங்களின் கறைபடிந்த வாழ்க்கை தெளிவாகத்தெரிகிறது.
xii.      அறையப்பட்ட, காறிஉமிழப்பட்ட உருக்குலைந்த உமது முகத்தில் எமது கோரமான அருவருப்பான எங்கள் பாவங்களைப் பார்க்கமுடிகிறது. 
xiii.      எல்லோராலும் கைநெகிழப்பட்டு ஆதரவற்று நின்ற உம்மில் தனது குடும்பத்தால், உறவினர்களால், சமூகத்தால் கைவிடப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்டு ஆதரவற்று, சாலையோரங்களில் உருக்குலைந்து சுருண்டு கிடக்கும் எண்ணற்றோரை காண்கிறோம்.  அவர்கள்மேல் பரிவுகொண்டு, உதவும் மனதைத் தாரும்.
xiv.      நீர் தாகமாய் இருந்தபோது தந்தையாம் கடவுள் பாவிகள் மனம்திருந்தி தன்னிடம் வர ஏங்கிக் காத்திருப்பதை உணர்கிறோம். 
xv.      இயேசுவே உம்மை சிலுவையில் அறைய வைத்த எமது பாவங்களுக்காக நங்கள் வருந்தவும்,  பரிகாரம் செய்யவும் எங்களுக்கு உதவி செய்யும்.  எமது பாவங்களிலிருந்து எம்மை விடுவிக்க நீர் பட்ட விலைமதிக்கமுடியாத உமது பாடுகளையும், சிலுவைமரணத்தையும் நாங்கள் மறவாதிருக்க, உமது உருக்குலைந்த முகத்தை எங்கள் உள்ளத்தில் பதியச்செய்தருளும். பாவசூழல்களில் நாங்கள் பாவத்தில் விழாமல் இருக்க உருக்குலைந்த அந்த திருமுகம் ஒன்றே எங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறோம்.  உயிர்ப்புக்கும், நித்தியவாழ்விற்கும் சிலுவை மட்டுமே வழி என்பதை எங்களுக்கு படிப்பித்தருளும்;  புனித வெள்ளியும் அதன் துன்பங்களும் இல்லையேல் உயிர்ப்பு ஞாயிறும் அதன் மகிமையும் இல்லை என்ற பாடத்தை எங்களுக்குக் கற்றுத்தாரும்.  ஆமென்.

பாடல் :  இயேசுவே என்னுடன் நீ பேசு, என் இதயம் கூறுவதைக் கேளு
              நான் ஒரு பாவி, ஆறுதல் நீ கூறு, நாள் முழுதும் என்னை வழிநடத்து.
             உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம், உன் திரு இதயம் பேரானந்தம்
           உன் திரு வாழ்வெனக்கருளும், இறைவா, இறைவா

Comments

Popular posts from this blog

சிலுவைப் பாதை